இந்தியாவில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: ரூ.700 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது

0
7

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது. குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மோடேரா நகரில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் விளங்குகிறது. இந்த மைதானத்தை விட பெரிதான கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் கட்டப்பட்டு வருகிறது. 

அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டி கண்டுகளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் நகரில் மொடேரா பகுதியில் 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தின் கட்டுமான பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 3,000 கார்கள், 10 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக தரத்திலான நீச்சல் குளமும் மைதானத்துக்குள்ளே அமைக்கப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் மைதானங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 52 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் மைதானங்கள் உள்ளன. 

இந்தியாவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 23 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் மைதானங்கள் உள்ளன. இதற்கு முன் மோடேரா ஸ்டேடியம் 54,000 இருக்கை வசதிகளை கொண்டிருந்தது. இது 2016-ம் ஆண்டு குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மூலம் இடிக்கப்பட்டு, தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here