ஒரே நாளில் வெளியாவதால் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூல் பாதிக்குமா?

0
17

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 10-ந் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். பேட்ட பொங்கலுக்கு வரும் என்று முதலில் அறிவித்ததுமே விஸ்வாசம் தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் பொங்கலுக்கு உறுதியாக வரும் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.

இது இருவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வசூல் பாதிக்குமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகைகளிலும் சிறிய படங்களை மற்ற நாட்களிலும் வெளியிட விதித்திருந்த கட்டுப்பாட்டை கிறிஸ்துமஸ், பொங்கலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி விட்டது. பேட்ட, விஸ்வாசம் படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-

“பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரு வார இடைவெளியில் வந்தால் நல்ல வசூல் பார்க்கும். ஆனால் ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது வசூலை நிச்சயம் பாதிக்கும். மொத்தம் உள்ள 1,090 தியேட்டர்களில் சுமார் 600 தியேட்டர்கள் பேட்ட படத்துக்கும், மீதி விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கப்படலாம். முதல் மூன்று, நான்கு நாட்கள் ரசிகர்கள் பார்ப்பார்கள்.

அதன்பிறகுதான் பொதுமக்கள் வருவார்கள். இரண்டு படங்களுக்கும் டிக்கெட் கட்டண விலையை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியமா? என்பது சந்தேகம். உதாரணத்துக்கு ரூ.5 கோடி வசூலித்தால் ரூ.3 கோடி ஒரு படத்துக்கும், ரூ.2 கோடி இன்னொரு படத்துக்கும் பிரியும். ஒரே தேதியில் இரண்டு படங்கள் வெளியாவதை தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வரவேற்க மாட்டார்கள். ஜி.எஸ்.டி வரிகுறைப்பால் டிக்கெட் கட்டணம் குறைகிறது. இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி.” இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here