“காபி கலகம்!” சுந்தர் பிச்சைக்கு எதிராகக் கொந்தளிக்கும் கூகுள் ஊழியர்கள்

0
26

காபி குடிக்கும் வரிசையில் கூட தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும், ஒப்பந்தப் பணியாளர்களைப் பாரபட்சமாக நடத்தாமல் சமமாக நடத்துமாறும் கூறி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தப் பணியாளர்கள் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டும் வெளிநடப்பும்

கூகுள் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது அண்மையில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆண்ட்ராய்டு சாப்ட்வேரை உருவாக்கிய ஆண்டி ரூபின் மீது பல பெண் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இவை நம்பகமானவைதான் என கூகுள் நிறுவனம் முடிவு செய்த போதிலும், கடந்த 2014-ம் ஆண்டில் அவருக்கு வழங்க வேண்டிய 90 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைக் குறைக்காமல் அப்படியே வழங்கியது. இதேபோல், கூகுள் நிறுவனத்தின் எக்ஸ் லேப் டைக்ரன் `டிவால்’ மீதும் பாலியல் குற்றச்சாட்டு சில ஆண்டுகளுக்கு முன் சுமத்தப்பட்டது. ஆனால், அதற்கு பின்பும் அவர் இயக்குநராக நீடித்தார். ஆனால் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினமா செய்தார். ஆனால், அவரது பரிசுத் தொகையும் நிறுத்தப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்காக, அதன் சிஇஓ சுந்தர் பிச்சை, மன்னிப்புக் கோரினார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், “பெரும்பாலான ஊழியர்களின் கோபத்தையும், ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டுள்ளேன். நமது சமூகத்தில் நீண்ட காலமாக நீடித்த பிரச்னை கூகுள் நிறுவனத்திலும் நீடித்தது. இந்த நிலை மாறும் என உறுதியளிக்கிறேன். கடந்த காலங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 13 சீனியர் மேனேஜர்கள் உட்பட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த விளக்கம் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் 94 ஆயிரம் ஊழியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உலகம் முழுவதும் பல நாடுகளில் பணியாற்றும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் நவம்பர் 2-ம் தேதி பணி செய்யாமல் ஒருநாள் வெளிநடப்பு செய்தனர்.

கூகுள் ஊழியர்கள் போராட்டம்

கொந்தளிக்கும் ஒப்பந்தப் பணியாளர்கள்

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், வரும் காலங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், அதை எப்படிக் கையாள்வது என்பது குறித்த விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுடன் கூடிய கொள்கைகளை கூகுளுக்கு வகுத்துக் கொடுத்தது. அதேசமயம் கூகுளில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் வெண்டர்களுக்கான கொள்கைகள் குறித்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கூடவே பணியாளர்களுக்கான இதரச் சலுகைகள் மற்றும் பயன்கள் தொடர்பாகவும் எவ்வித மாற்றமும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் சேர்ந்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், `கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தப் பணியாளர்களை பாரபட்சம் பார்க்காமல் சமமாக நடத்துங்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், “கம்பெனி இமெயில்களைப் படிப்பதற்கான அணுகல் (access), டவுன் ஹாலில் நடைபெறும் பணியாளர் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதி, சிறந்த சுகாதார வசதி மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளைத் தர வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கூகுளில் முழு நேரப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.

பாரபட்சமாகவும் தவறாகவும் நடத்தப்படுவதை நாங்கள் தொடர அனுமதித்து அமைதியாக இருந்தால், வருங்காலத்திலும் நாங்கள் அப்படியேதான் நடத்தப்படுவோம். எங்களையும் நிரந்தரப் பணியாளர்களுக்குச் சமமாக நடத்தத் தேவையான சக்தியும் பணபலமும் கூகுளிடம் உள்ளது” என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

`காபி குடிக்கும் வரிசையில் கூட அவமதிக்கப்படுகிறோம்..!’

பல அமெரிக்க நிறுவனங்கள், அவ்வப்போது ஒப்பந்தப் பணியாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என்றாலும், கூகுளின் கதை வேறாக உள்ளதாக அங்கு பணிபுரிபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் கூகுள் இதுவரை 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ள போதிலும், கூகுளின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களாகவும், வெண்டர்களாகவும் உள்ளதாக அமெரிக்காவின் வர்த்தக இணையதளம் ஒன்று, கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த வகை பணியாளர்கள் கூகுள் நிறுவனத்துக்குள் “TVCs” (vendors and contractors) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், கோடிங் எழுதுபவர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சேவையிலிருந்து பணி தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் உதவி செய்யக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால், தங்களுக்கு கூகுளின் நிரந்தரப் பணியாளர்களுக்கு அளிக்கப்படுவதைப் போன்று சலுகைகளோ, சுகாதார வசதிகளோ, கூகுள் நிறுவனத்தின் பங்குகளோ வழங்கப்படுவதில்லை என இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அலுவலக வளாகத்தின் சில கட்டடங்களின் உள்ளே செல்லக்கூட தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தாங்கள் பெரும்பாலும் வெளியிலுள்ள ஏஜென்சிகள் மூலமே பணியமர்த்தப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர்.

சமீபத்தில் கூகுளில் பணிபுரியும் சில TVCs பணியாளர்கள், செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நிரந்தரப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போன்று நடத்தப்படுகிறோம். காபி குடிப்பதற்கான வரிசையில் நிற்கும்போது கூட, நிரந்தரப் பணியாளர் திடீரென எங்களுக்கு முன்னால் நுழைந்து விடுகிறார். கேட்டால், நாங்கள் ஒப்பந்தப் பணியாளர் என்கிறார். அதேபோன்று அலுவலகத்தில் மேஜையைப் பயன்படுத்துவதிலும். பாதி வேலை செய்துகொண்டிருக்கும்போதே அங்கு திடீரென வரும் நிரந்தர ஊழியர், `நீ தற்காலிகப் பணியாளர்தானே… இடத்தைக் காலி செய்!’ என்று கூறி எங்களை விரட்டி அடித்துவிட்டு அவர் அதில் அமர்ந்து கொள்கிறார்.

கூகுள் அலுவலகம்

சில சமயங்களில் வேலை தொடர்பான ஏதாவது தகவல்களைக் கேட்டால் கூடத்  தரப்படுவதில்லை. இது எங்களுக்குப் பணி குறித்த அச்சத்தைத் தருகிறது.

உழைப்புச் சுரண்டல்

இத்தனைக்கும் நிரந்தர ஊழியர்களைக் காட்டிலும் நாங்கள் அதிகமாகவே உழைக்கிறோம். ஒரு ஒப்பந்தப் பணியாளர் வாரத்துக்கு 50 முதல் 60 மணி நேரம் கூட பணியாற்றுகிறார். ஆனால், ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. இப்படி நாங்கள் விரட்டி விரட்டி வேலை வாங்கப்படுவதால், நிறுவனத்தின் பிசினஸ் இலக்கு விரைவாகவும், மலிவான விலையிலும் செய்து முடிக்கப்படுகிறது.

வேலைக்கு எடுக்கும்போது விரைவிலேயே பணி நிரந்தரம் செய்துவிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் தற்காலிகப் பணியாளர்களாகவே அவர்கள் நீடிக்கிறார்கள்” என்று கொட்டித் தீர்த்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கும் கடிதத்துக்கும் கூகுள் நிர்வாகம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறதோ…?!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here