12-வது ஐ.பி.எல் ஏலம் : 70 இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு : பல கோடிக்கு ஏலம் போனவர்களின் பரிதாப நிலை

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம்  ஜெய்ப்பூரில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. அணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கப்படவுள்ளனர்.

இதில் சுமார் 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் . இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.  ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள் ஆவர்.
இந்நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் புதிதாக விளையாடும் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், புதுச்சேரி மற்றும் பீகார் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதில் இருந்து இறுதிப் பட்டியலை வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் பிரபலமான ஹூக் எட்மிடெஸ் என்பவர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகத்தால் கழற்றி விடப்பட்ட வீரர்கள் எப்படியாவது குறைந்த விலையிலாவது ஏதாவது ஓர் அணியில் ஒட்டிக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர்.
இந்திய அணி நட்சத்திர வீரராக திகழ்ந்து தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்ட யுவராஜ் சிங் மீண்டும் ஐபிஎல் தொடரில் தலைகாட்ட முயல்கிறார்.
இதற்காக மிகக் குறைந்த விலையாக ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்துக்குத் தயாராக உள்ளார்.
இவரைப் போலவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் இதற்கு முன்னர் நடந்த ஐபிஎல் தொடர்களில் யுவராஜ் சிங்கை அணிகள் 16 கோடி மற்றும் 14 கோடி எல்லாம் கொடுத்து எடுத்தனர்.
ஆனால் தற்போது 1 கோடியாவது கொடுத்து எடுங்கள் என்ற நிலைமைக்கு யுவராஜ் தள்ளப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close