மக்கள் முன்னெடுக்கும் விபரீத நகர்வுகளைத் தடுக்க முடியாது : மைத்திரிக்கு கரு அவசர கடிதம்

0
13

பாராளுமன்ற உறுப்பினர்கள் 125 பேருக்கு மேற்பட்டோரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் விரைந்து கூட்டப்பட்டு, பெரும்பான்மைப்பலம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாட்டில் பாரிய அரசியல் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.

சபாநாயகரின் கடிதத்தில் மேலும்,

நாட்டின் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த உங்களாலேயே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை நம்புவதற்கு முடியாதுள்ளது.

பாராளுமன்றம் கூட்டப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படாவிட்டால், ஜனநாயக உரிமையினை அடைந்து கொள்வதற்காக மக்கள் முன்னெடுக்கும் விபரீத நகர்வுகளைத் தடுக்க முடியாது போகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாப்பது தொடர்பில் என்னால் கடந்த 28ஆம் திகதி உங்களுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனக்கோர விரும்புகின்றேன்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாக்குமாறு கோரியும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை உறுதிப்படுத்துவதற்காகவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 125 பேருக்கும் மேற்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சபாநாயகர் என்ற வகையில் கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது என்னுடைய கடமையாகும். பாராளுமன்றத்தை உடனடியாக் கூட்டுவதுடன், பெரும்பான்மைப்பலம் யாரிடமுள்ளதோ அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமே அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியும். அதனை மேற்கொள்ளாதிருப்பது ஜனாநாயக உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதாக அமையும்.

பாராளுமன்ற அமர்வினை 18 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமையானது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன், நல்லாட்சியை முன்னெடுப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த உங்களுடைய செயற்பாடா என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. அத்தோடு இந்த செயற்பாடு சர்வதேச சமூகம் உங்கள் மீது கொண்டுள்ள நன்மதிப்பிற்கு பங்கம் விளைவிப்பதாகவும் அமையும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தற்போதுவரை இரண்டு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதேபோல் ஊடக நிலையங்களுக்குள் குண்டர் கும்பல் நுழைந்து, நிர்வாகத்தை தமது வசப்படுத்தியுள்ள சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்த நல்லாட்சி இதுவல்ல.

மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு, நாட்டை மேலும் மோசமான நிலையை நோக்கி நகர்த்தாது ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு மீண்டுமொரு முறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here