இந்தியா-ஜப்பான் இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி, ஷின்ஜோ அபே முன்னிலையில் கையெழுத்து

0
1

இந்தியா-ஜப்பான் இடையே 13-வது வருடாந்திர உச்சி மாநாடு டோக்கியோ நகரில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் டோக்கியோ சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து யமனாஷி நகருக்கு பயணமானார். அங்கு அவர் அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபேயை சாதாரண முறையில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே டோக்கியோ நகரின் கான்டெய் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது, இரு நாடுகளின் உறவு, பிராந்திய மற்றும் இந்திய-பசிபிக் பெருங்கடல் பிரச்சினை தொடர்பாக அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இரு தலைவர்களின் முன்னிலையில் மின்னணு தொழில் நுட்பம், இணைய பாதுகாப்பு, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா- ஆயுர்வேதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சுகாதார இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவது, ராணுவம், கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, விண்வெளி அறிவியல்துறை ஆகிய 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

இந்த ஒப்பந்தங்களில் மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம், டெல்லி 3-ம் கட்ட பறக்கும் ரெயில் திட்டம், வடகிழக்கு மாநில சாலைகள் ஒருங்கிணைப்பு திட்டம் ஆகியவையும் அடங்கும்.

இரு நாடுகளும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக ஆண்டுக்கு 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.5¼ லட்சம் கோடி) அளவிற்கு வர்த்தகத்தை கையாளுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் அன்னிய செலாவணி மற்றும் மூலதனச் சந்தையின் ஸ்திரத்தன்மை வலுவடையும் என்று குறிப்பிடத்தக்கது.

ராணுவம், வெளியுறவு தொடர்பாக 2 நாடுகளின் அந்தந்த துறை மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் இரு தலைவர்களின் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

மோடி, ஷின்ஜோ சந்திப்பை தொடர்ந்து இருநாடுகளின் சார்பில் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் மும்பையில் 2008-ம் ஆண்டும், பதான்கோட்டில் 2016-ம் ஆண்டும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை தடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் அல்கொய்தா, ஐ.எஸ்., ஜெய்ஷ்-இ முகமது, லஷ்கர் இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை பலப்படுத்துவது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்தியா தொடங்கியுள்ள சர்வதேச சூரிய சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கும் ஜப்பான் ஒப்புக்கொண்டது. மேலும் இந்த கூட்டமைப்பில் 71-வது நாடாக ஜப்பான் கையெழுத்திட்டது.

ஷின்ஜோ அபேயை தொடர்ந்து மோடி ஜப்பானின் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தோரோ நிகாய், ஜப்பானின் வெளியுறவு மந்திரி தாரோ கோனு, வர்த்தக மந்திரி ஹிரோஷிகே செகோ, கனவாகா கவர்னர் யுஜி குரோவா ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

ஜப்பானிய தொழில் அதிபர்கள் கூட்டத்தில் மோடி பேசியபோது, இந்தியாவில் தொழில் முதலீடுகளை நீங்கள் மேலும் அதிகரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பிரதமர் மோடி டோக்கியோ நகரில் இந்திய சமூகத்தினரிடையே பேசும்போது கூறியதாவது:-

இந்தியாவில் தகவல் தொடர்பு மற்றும் இணையதள சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இணையதள சேவை கிராமங்களிலும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

2022-ம் ஆண்டில் இந்தியாவில் மின்னணு பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிற நிலையை அடையும். இதன் மூலம் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை மலிவாக உள்ளது.

தற்காப்பு கலைகள் மிகுந்துள்ள ஜப்பானில் இந்திய சமூகத்தினர் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை அறிமுகம் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் பேசினார்.

தனது 2 நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்றிரவு டோக்கியோவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here