‘அதுல கூட இவ்ளோ இல்லையேப்பா!’ சாம்சங் கேலக்ஸி A9-ன் நான்கு மிரட்டல்கள்

லகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் என்ற அடைமொழியுடன் வெளியாகியிருக்கிறது சாம்சங்கின் கேலக்ஸி A9 (2018) ஸ்மார்ட்போன். கடந்த வியாழக்கிழமை அன்று மலேசியாவில் நடந்த நிகழ்வில் இந்த புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது டூயல் கேமராக்களின் காலம். இன்றைக்குச் சந்தையில் கிடைக்கும் பல மொபைல்களில் டூயல் கேமரா சகஜமாகிவிட்டது. தற்பொழுது அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த மொபைல் நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கின்றன. சாம்சங்கே அண்மையில் மூன்று கேமராக்களைக் கொண்ட கேலக்ஸி A7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. எனவே வரும் நாள்களில் இரண்டிற்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம். கேலக்ஸி A9-னில் முன் புறத்தில் இருக்கும் ஒரு கேமராவையும் சேர்த்தால் மொத்தம் ஐந்து கேமராக்கள் இருக்கின்றன. இந்த கேமராக்களில் என்ன ஸ்பெஷல் ?

எதற்காக நான்கு கேமராக்கள்?

சாம்சங்

கேலக்ஸி A9-னின் பின்புறமாக நான்கு கேமராக்கள் ஒன்றின் கீழ் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் லென்ஸ்கள் அனைத்தும் வெவ்வேறு திறன் கொண்டவை. முதலில் இருப்பது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ். 8 மெகாபிக்ஸல் திறன் கொண்ட இது அதிக அளவிலான பரப்பை படம்பிடிக்க உதவும். மொபைலுக்கு முன்புறம் 120 டிகிரி அளவுக்கான பரப்பை இது கவர் செய்யும். அடுத்ததாக இரண்டாவது கேமராவில் இருப்பது டெலிபோட்டோ லென்ஸ். 10 மெகாபிக்ஸல் கொண்ட இதில் 2X ஆப்டிகல் ஜூம் திறன் கொண்டது. இதன் மூலமாகத் தொலைவில் இருக்கும் பொருளை விரைவாக ஜூம் செய்ய முடியும். மூன்றாவதாக இருக்கும் மெயின் கேமரா 24 MP திறன் கொண்டது. நான்காவதாக டெப்த் எபெக்ட்களுக்காக 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு ஸ்மார்ட்போனில் இத்தனை கேமராக்கள் இருந்தது கிடையாது. ஏன் ஒரு DSLR கேமராவில் கூட இது போன்ற வசதிகளுக்காக ஒவ்வொரு முறையும் அதற்கேற்ற லென்ஸ்களை மாற்றிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த நான்கு கேமராக்கள் மூலமாகச் சிறப்பான போட்டோக்களை எடுக்க முடியும் என்கிறது சாம்சங்.

கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனில் வேறு என்ன ஸ்பெஷல் ?

 சாம்சங் கேலக்ஸி A9

தொடக்கத்திலேயே நான்கு கேமராக்கள்தான் இதன் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டது சாம்சங். எனவே வேறு எந்த வசதிகளையும் புதிதாக இதில் தரவில்லை. பிற சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வசதிகளே இதில் கொடுக்கப்பட்டுள்ள, மேலும் வடிவமைப்பிலும் மாற்றமில்லை. கேலக்ஸி A9-னில் இருப்பது 6.3 இன்ச் 19:9 டிஸ்ப்ளே. வழக்கம்போல இதில் sAMOLED வகை திரையைப் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். இதன் மூலம் IPS வகை திரைகளை விட சிறப்பான காட்சி அனுபவத்தைப் பெற முடியும். பின்புறம் வளைவான கண்ணாடியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராவிற்கு அருகிலேயே பிங்கர்பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 24 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Qualcomm Snapdragon 660 புராஸசர் இதில் இருக்கிறது. 3800 mAh பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.128 GB இன்டர்னல் மெமரியை நீட்டித்துக் கொள்ள மெமரி கார்டை பயன்படுத்திக் கொள்ளளலாம். அதிக பட்சமாக 512 GB வரை பயன்படுத்தலாம். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள், மற்றும் ஒரு மெமரி கார்டைப் பயன்படுத்த முடியும். 6 GB ரேம் மற்றும் 8 GB ரேம் என இரண்டு வேரியன்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.51,000-க்கு இந்த கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் இந்த மொபைலை  அறிமுகப்படுத்தவிருக்கிறது சாம்சங்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close